

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சிறந்த சுற்றுலா தலம் என்பதால் தினமும் அதிகமான சுற்றுலா பயணிகள் அவலாஞ்சி பகுதிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அவலாஞ்சி பகுதிக்கு சென்ற பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர், 2 வெள்ளை நிற புலிகளை பார்த்து புகைப்படம் எடுத்தார். மேலும் அந்த புகைப்படங்களை வனத்துறையினரிடம் வழங்கினார்.
அதனை கண்டு வியப்படைந்த வனத்துறையினர், அந்த புலிகளை காண்காணிக்க 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தினர். அதில் புகைப்பட கலைஞர் காட்டிய படத்தில், 2 வெள்ளை புலிகள் உள்பட 4 புலிகள் நடந்து செல்வது பதிவாகியிருந்தது.
அதன் பிறகு வெள்ளை புலிகளை கண்காணிக்க வனத்துறையினர் கேமராக்களை தொடர்ந்து பொருத்திய நிலையில், அந்த புலிகள் நடமாட்டம் பதிவாகவில்லை. இதையடுத்து அந்த புலிகள் வேறு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என நினைத்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2021-ஆண்டு அவலாஞ்சி மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதி அருகே வெள்ளை புலிகள் நடந்து வந்ததாக தகவல் பரவியது. ஆனால், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சமீபத்தில் அவலாஞ்சி வனப்பகுதியில் மலையின் மீது வெள்ளை புலி ஒன்று நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். அதில், முட்புதருக்குள் நின்றிருந்த புலி நீண்ட நேரம் நின்று விட்டு மலையை கடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்டுள்ள வெள்ளை புலியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு 2 வெள்ளை புலிகள் இருந்த நிலையில், தற் போது ஒரே ஒரு வெள்ளை புலி மட்டும் தென்பட்டுள்ளது. இந்த புலியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த 4 நாட்களுக்கு முன் இந்த பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், இந்த வீடியோவை எடுத்துள்ளனர். மிக தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டதால், வெள்ளை புலி தானா என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியாது. இதனை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளோம் என்றனர்.