

திருப்பூர்,
ஊத்துக்குளி அருகே, இளம்பெண்ணை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27 வயது). கட்டிட தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26 வயது). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின்னர், இருவரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்கு சென்றார். உத்திரா அதே பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
ரஞ்சித் குமார் வேலைக்கு தினமும் பைக்கில் செல்வது வழக்கம். அப்போது, காலையில் மனைவியை மருத்துவமனையில் அவர் விட்டு செல்வார். அதன்பிறகு இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போதும், மருத்துவமனைக்கு சென்று மனைவியை அழைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அன்று காலை வழக்கம்போல் ரஞ்சித்குமார் உத்திராவை மருத்துவமனையில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் அன்று இரவு மனைவியை அழைத்து செல்வதற்காக மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவமனையில் வேலை பார்த்த ஊழியர்கள் "உங்கள் மனைவி ஏற்கனவே வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டதாக" தெரிவித்தனர். இதையடுத்து ரஞ்சித்குமார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் உத்திரா இல்லை. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் மனைவியை தேடினார். இருப்பினும் மனைவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் உத்திரா தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த பாதையில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் உத்திரா கடைசியாக யாருடன் செல்போனில் பேசினார்? என அவரது செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே முட்புதருக்குள் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில், கிடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, அந்த இடத்தில் கிடந்த ஆடைகள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண், கடந்த 14-ந்தேதி காணாமல் போன உத்திரா என்பது தெரியவந்தது இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உத்திராவை, மர்மநபர்கள் கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உத்திரா தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போன காரணத்தினால் நகைக்காக அவரை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற ரஞ்சித் குமார், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது துக்கம் தாங்காமல் அருகில் உள்ள ஒரு மரக்கிளையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஓடிச்சென்று, அவரை மீட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.