

சென்னை,
வரும் மார்ச் 1-ம் தேதியில் இருந்து யுடிஎஸ் செயலி செயல்படாது என இந்திய ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரெயில் சேவைகளை பெறுவதற்கு பல்வேறு செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் முக்கியமானது யுடிஎஸ் (UTS) செயலி. பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட், அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை இந்த செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ரெயில் நிலையங்களில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் யுடிஎஸ் செயலி செயல்படாது என்று இந்தியன் ரெயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிதாக 'ரெயில்ஒன்' செயலி மூலம் டிக்கெட்டுக்ளை பெறலாம் என தெரிவித்துள்ளது. ரெயில் ஒன் செயலி மூலம் மேற்கூறிய டிக்கெட்கள் தவிர, முன்பதிவு டிக்கெட்டும் பெற முடியும். ரெயில்கள் தேடல், பி.என்.ஆர்., நிலை, ரெயிலை 'டிராக்' செய்தல், உணவு 'ஆர்டர்', டிக்கெட் 'ரீபண்ட்' பெறுதல் சேவைகளும் வழங்கப்படுகின்றன. ரெயில்வே புகார்களை அளிக்கும் 'ரெயில் மதாத்' சேவையும் இச்செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி செயலியை பயன்படுத்த வேண்டியதில்லை.
செயலியை பதிவிறக்கம் செய்து யு.டி.எஸ்., செயலியின் பயனாளர் குறியீடுகளை பயன்படுத்தியே கணக்கை துவங்கலாம். ஏற்கனவே சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரெயில்ஒன் செயலிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இச்செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்க முன்பதிவில்லா டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட் பெறுவோருக்கு 3 சதவீதம் தள்ளுபடியும் உண்டு.