மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் - அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது 17.04.2023 அன்று முதல்-அமைச்சர் அவர்கள் இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:-

"மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், அரசுத் துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவதற்கு அந்தந்தத் துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்".

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், முதல்-அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் துறைகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அலுவலகங்களில் A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு. அதில் 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-இன் சட்டப்பிரிவு 34-இல் வலியுறுத்தியுள்ளவாறு. மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய உகந்தவைகளாக கண்டறியப்பட்ட பணியிடங்களில், மாற்றுத்திறன் வகையினரை உரிய தகுதிகளின் அடிப்படையில் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி, அனைத்து பணியிடங்களையும் ஓராண்டிற்குள் தெரிவு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்நேர்வில் ஏற்கனவே அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் தளர்வு செய்து, முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களை அந்தந்த துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிக்கொள்ளும் வகையில் அரசாணை (நிலை) எண்.151, சமூக நலம் (ம) சத்துணவுத் திட்ட (சந4)த் துறை, நாள்.16.10.2008-னை செயல்படுத்தும் விதமாக அனைத்துத் துறைகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அரசாணை வெளியிட  ஆவன செய்யுமாறும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்துதல் தொடர்பான முதல்-அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, பின்வருமாறு ஆணை வெளியிடுகிறது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-இன் பிரிவு 27(b) மற்றும் உட்பிரிவு (bbb)-இல் வரையறுக்கப்பட்டுள்ளதற்கிணங்க, அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளில் பணிபுரியும் மொத்த பணியாளர்களை கணக்கில் கொண்டு, அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அனைத்து பணியிடங்களையும் தெரிவு செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை (Special Recruitment Drive) நடத்தி அப்பணியிடங்களை ஓராண்டிற்குள் நிரப்புவது தொடர்பான நடவடிக்கையினை அரசின் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசின் பல்வேறுத் துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வில் பங்கேற்கும் வகையில் அந்தந்த துறைகளின் விதிகளுக்குட்பட்டு வயது வரம்பு மற்றும் தேர்வு விதிகளில் ஒரு முறை மட்டுமே தளர்வுகள் வழங்கி அக்காலிப்பணியிடங்களை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் மூலம் நிரப்பிட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4. மேலும், சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல் தொடர்பாக ஒவ்வொரு துறை வாரியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து இப்பணிகளின் காலாண்டு முன்னேற்ற அறிக்கையினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்.

5. இவ்வாணை, மனித வள மேலாண்மைத் துறையின் அலுவல் சாரா எண்.5221677/எஸ்2/2023, நாள்.24.07.2023-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com