அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக ஏழையெளிய மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்றால், அனைத்து மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர், மருந்தாளர், தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட வேண்டும்; மருத்துவ உபகரணங்கள், குளிர்பதன வசதி, மாத்திரைகள் போன்றவை இருக்க வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சியில் மருந்தாளர் காலிப் பணியிடங்களே நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் 4,500 மருந்தாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 700 மருந்தாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஓய்வு பெறும் மருந்தாளர் பணியிடங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் மருந்துகளைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும், மருந்து விநியோகத்தில் மிகுந்த சிரமம் உள்ளதாகவும், 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் தகரத்தால் அமைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளில் இருக்கின்றன என்றும், அரசு மருத்துவமனைகளில் குளிர்பதன வசதி இல்லை என்றும் அனைத்து மருந்தாளர் சங்கம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் ஏழையெளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மருத்துவமனையைத் தேடிச் சென்றாலே மருந்து இல்லை என்கின்ற நிலையில், "இல்லம் தேடி மருத்துவம்" என்று தி.மு.க. அரசு விளம்பரப்படுத்திக் கொண்டு வருவது நகைப்புக்குரியதாக உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் நோயாளிகளை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க. அரசுக்கு மக்கள்மீது அக்கறை இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்பவும், மருந்துகளை அதற்கேற்ற வெப்ப நிலையில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com