சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் குவியும் கூட்டம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நேற்று சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள குவிந்தனர்.
சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் குவியும் கூட்டம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்கிறது. கொரோனா முதல் அலையின் போது கூட 7 ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது வேகமெடுக்கும் 2-வது அலையில் தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

முதல் நாளில் தமிழகம் முழுவதும் 160 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 3 ஆயிரத்து 126 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்தது. இருந்தாலும், பெரும்பாலானவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்த்து வந்தனர்.

இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் தினசரி எண்ணிக்கை மந்த நிலைக்கு சென்றது. இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் படையெடுக்கின்றனர்.

அந்தவகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 650 பேருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 700 பேருக்கும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 800 பேருக்கும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 300 முதல் 400 பேருக்கும் தினசரி தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட பொதுமக்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். இதேபோல் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆர்வத்துடன் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் தாங்களாகவே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால், கொரோனா பரவலை தடுக்கலாம், என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com