கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்


கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்
x

நெல்லை, தூத்துக்குடியில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி பணி டிசம்பர் 29-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறும். கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும்.

நோய் பரவும் விதம்:

இந்த நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத் தட்டுகள், தண்ணீர், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் பரவும் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.

நோய் அறிகுறிகள்:

மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும். தீவனம் உட்கொள்ளாது மந்த நிலையில் இருக்கும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி பின்பு அவை உடைந்து ரணமாகி மாறும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத் தன்மையும், ரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்கவிடக் கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும்.

இந்த நோய் தாக்குதலினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த தருணத்தை பயன்படுத்தி எந்தவித விடுபாடுமின்றி தங்கள் கால்நடைகளுக்கு காதுவில்லைகள் அணிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோமாரி நோயானது ஒரு வகை வைரஸ் என்னும் நச்சுக்கிருமியினால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்த நோய் காற்றின் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒன்று. இந்த நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

எனவே இந்த நோயை முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். தடுப்பூசி பணிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நடைபெறவுள்ள எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்புத் திட்டப் பணியில் தவறாது அனைத்து மாட்டினங்களுக்கும் விடுபாடின்றி தடுப்பூசி செலுத்தி பயன்பெறவும், தடுப்பூசி போடுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026-ம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 1,10,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story