“டாஸ்மாக் செல்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“டாஸ்மாக் செல்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்தி வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்று மாநிலம் முழுவதும் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் சென்னையில் 13-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 200 வார்டுகளில் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. தற்போது சுகாதாரத்துறையின் கையிருப்பில் ஒரு கோடியே 32 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. இதுவரை முதல் தவணையை 76 சதவீதம் பேரும், 2-வது தவணையை 40 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இதனிடையே சென்னை அடையாறு மேம்பாலம் அருகே மலர் மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பொன்முடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக அளவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்குச் செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com