தடுப்பூசி திருவிழா தொடங்கியது: தமிழகத்தில் தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திருவிழா தொடங்கியது: தமிழகத்தில் தினசரி 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு
Published on

தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற 2 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் வரை 37 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி திருவிழா நடத்த திட்டமிட்டிருந்தது. தடுப்பூசி திருவிழா காலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் விடுபட்டவர்களை வீடு வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இது 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதையொட்டி தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் படி தற்போது வரை 1 கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 37 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனால் அதிக நபர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கு ஏற்ப நடத்த சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்த தடுப்பூசி திருவிழாவின் மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்துக்கு இதுவரை 55 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதில், 38 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழா 4 நாட்கள் மட்டுமின்றி தொடர்ந்து நடைபெறும். கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com