45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை - சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
Published on

சென்னை,

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனை 100 சதவீதமாக உயர்த்தி, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள தமிழக அரசு சார்பில் ஒரு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் துணை பொது சுகாதார இயக்குனர் ஆகியோருக்கு தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, 14 நாட்கள் கொண்ட இந்த செயல்திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com