தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு; அடுத்த தவணை 11-ந்தேதி தான் கிடைக்கும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், மத்திய அரசிடம் இருந்து அடுத்த தவணை தடுப்பூசி 11-ந்தேதிதான் கிடைக்கும் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு; அடுத்த தவணை 11-ந்தேதி தான் கிடைக்கும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்
Published on

கடை ஊழியர்களுக்கு தடுப்பூசி

சென்னை தியாகராயநகர் பகுதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக வளாகங்கள், அங்காடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னை தியாகராயநகரில் பல்வேறு கடைகளில் பணியாற்றி வரும் வியாபாரிகள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இங்கு பணியாற்றி வரும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த தவணை

தமிழகத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வருவதால், மத்திய அரசு கூடுதலாக அனுப்பக்கூடிய தடுப்பூசிகளும் போதவில்லை. தற்போது கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளும் இன்றுடன் (நேற்று) முடிவடைந்து விடும். தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், 11-ந்தேதி தான் அடுத்த தவணை தடுப்பூசிகள் கிடைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.ஆனால் அதற்கு முன் கூட்டியே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தியாகராயநகர் வீதிகளில், கடைகளில் கூட்டம் அதிகம் வரும். எனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, துணை கமிஷனர்கள் விஷூமகாஜன், டாக்டர் மனிஷ், ஷரண்யா அரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com