

சென்னை,
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதற்காக உலக சுகாதார நிறுவன முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சவுமியா சுவாமிநாதனுக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் சவுமியா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இந்தியாவில் 8 தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் முயற்சியில் சில நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அரசும் அதற்கு உதவியளித்து வருகிறது. இது ஒரு நீண்ட காலப்பணி. பொதுவாக ஒரு புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
ஆனால் கொரோனா ஒரு பெருந்தொற்று என்பதால் அதை முறியடிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறோம். இதற்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல், ஒன்றரை ஆண்டு வரை ஆகலாம். தடுப்பு மருந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்கள் மருந்து குறித்த தகவல்களை அனுப்பினால், நாங்கள் அனுமதியளிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை எந்த தடுப்பு மருந்தும் விவரங்கள் அளிக்கும் நிலைக்கு வரவில்லை.
பொதுமக்களுக்கு இந்த தடுப்பு மருந்து இலவசமாகவே கிடைக்கும். அதற்கான நிதியை திரட்டும் பணியில் உலக சுகாதார நிறுவனம் இறங்கியுள்ளது. கொரோனா தடுப்பில் ஊரடங்கு குறைந்த கால தற்காலிக பலனை மட்டுமே அளிக்கும். அது ஒரு நிரந்தர தீர்வு அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்று பரவுவதை குறைக்க முடியும். ஆனால் பொருளாதார காரணங்கள் இருப்பதால் அதை அதிக நாட்களுக்கு நீட்டிக்க இயலாது.
தொற்று தொடர்பை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். வழங்கப்படும் ஆலோசனைகளை அரசு பின்பற்றுகிறது. பொதுமக்கள் அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். அப்படி நடந்தால், இயல்பு வாழ்க்கைக்கு அனைவரும் திரும்ப முடியும்.தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைவாகவே உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து வரும் வரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.