பச்சை நிறமாக மாறிய வைகை அணை தண்ணீர்.. 'குடிநீருக்கு உகந்ததல்ல' என அறிவிப்பு

வைகை அணையின் அடி மட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளது.
பச்சை நிறமாக மாறிய வைகை அணை தண்ணீர்.. 'குடிநீருக்கு உகந்ததல்ல' என அறிவிப்பு
Published on

மதுரை,

71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், போதிய நீர்வரத்து இல்லாததாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக சரிந்துள்ளது. மொத்த நீர் இருப்பு 117 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் வினியோகம் நிறுத்தம்

அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழ் சென்றால், அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகர் மற்றும் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.

தற்போது அணையில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை கொண்டு தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தண்ணீரும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர அறிக்கை

இந்த நிலையில், வைகை அணையில் தற்போது உள்ள தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர அறிக்கை அனுப்பியுள்ளார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

இதுதொடர்பான அந்த அறிக்கையில், "வைகை அணையின் அடி மட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளது. பல்வேறு முறைகளில் சுத்திகரிப்பு செய்தாலும் தண்ணீரை முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை. எனவே தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல. மேலும் அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com