திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகப்பெருமான் பிறந்த நாளான நேற்று சுவாமியை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பாத யாத்திரையாகவும் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிலர் அங்க பிரதட்சணம் செய்து சாமியை வழிபட்டனர்.

சிறப்பு பஸ், ரெயில்கள்

பக்தர்கள் வசதிக்காக நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி போன்ற ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் திருச்செந்தூர்-நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில், துணை சூப்பிரண்டுகள் ஆவுடையப்பன், சம்பத், பிரேம் ஆனந்த், ஜெயராஜ், கண்ணபிரான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com