தமிழகத்தில் 'கிங்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

நீதியை நிலைநாட்ட தமிழ் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 'கிங்டம்' திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
Published on

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌயான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது பேன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் மறப் போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள இன வெறி அரசால் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து இருக்கிறார்கள்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றக்கூண்டில் கொடியவன் ராஜபக்சே உள்ளிட்ட கும்பலை நிறுத்தி தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ் தேசிய இனம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழகத்தில் கிங்டம் தெலுங்கு திரைப்படம்திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றுவலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com