

சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி உடைந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யு.எம்.எல். ஆகியோர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மதிமுகவும் தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை கூறி வருகிறது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெட்டி, படுக்கையுடன் தவெக செல்ல தயாராகிவிட்டதாக மல்லை சத்யா கூறியுள்ளார்.
சென்னையில் மதிமுக முன்னாள் நிர்வாகியும், திராவிட வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தவெக பக்கம் செல்வதற்கு பெட்டி, படுக்கையுடன் வைகோ தயாராக உள்ளதாகவே அவரின் பேச்சின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. முதல்-அமைச்சர் விஜய்யை பேரறிஞர் அண்ணாவுடன் வைகோ ஒப்பிட்டு பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவெக வெற்றி ஒரு வரலாற்று நிகழ்வு தான்.
திருச்சியில் கூட தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று விஜய் பேசியுள்ளார். இந்தப் போட்டியில் அல்லு சில்லுகளுக்கு எல்லாம் இடம் கிடையாது என்று அவர் சொல்லியிருப்பது மதிமுகவையும் சேர்த்துதான் என்பதை மறந்துவிடக்கூடாது.
திமுகவின் தயவால்தான் வைகோ நாடாளுமன்றத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றினார். 24 ஆண்டுகள் மாநிலங்களவையிலும், 5 ஆண்டுகள் மக்களவையிலும் அவர் பணியாற்றினார் என்றால், திமுகதான் அந்த வாய்ப்பை பெற்று தந்தது. அந்த துரதிருஷ்டவசம்தான் அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. வைகோவின் மகன் இன்று திருச்சியில் மக்களவை உறுப்பினராக இருக்கிறார் என்றால், அதற்கும் திமுக தான் காரணம்.
எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம், எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என விசிக சொன்னது. இடதுசாரிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர். உரிய தொகுதிகள் கிடைக்காததால், சுய மரியாதையோடு வெளியே நிற்கிறோம் என மக்கள் நீதி மய்யம் சொன்னது. ஆனால், சுயமரியாதை பற்றி வாய் கிழிய பேசும் வைகோ ஏன் அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் என அவர்தான் சொல்லவேண்டும். அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என சொல்ல வேண்டும்.
ஒருவேளை இப்போது திமுக வெற்றி பெற்றிருந்தால், வைகோ என்ன பேசுவார் என எங்களுக்குத் தெரியும். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல வாய்ப்புகளை பெற்று அவர் பயனடைந்தார் என்பதை மறுக்க முடியாது. இன்று திமுக ஆட்சியில் இல்லை என்பதால், அவதூறு பரப்புவதும், சேற்றை வாரி பூசுவதும், தமிழக வெற்றி கழகத்தை, திராவிட வெற்றிக் கழகமாக நாங்கள் பார்க்கிறோம் என துரை வைகோ பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.