வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை காவல் துறைக்கு வைகோ வலியுறுத்தல்

வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை காவல் துறைக்கு வைகோ வலியுறுத்தல்

வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Published on

சென்னை,

ஜல்லிக்கட்டு உரிமையை காக்க மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்திய வரலாற்றிலேயே ஒரு லட்சியத்துக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டு நடத்திய அறவழி அமைதிப் போராட்டம், இதுபோல் இதுவரை நடந்தது இல்லை என்று உச்சிமீது மெச்சத்தகும் விதத்தில் மாணவர்களின் மெரினா புரட்சி தமிழர்களின் ஜல்லிக்கட்டு உரிமையைப் பாதுகாக்க நடைபெற்று, வெற்றியும் ஈட்டியது.

இந்த அறப்போராட்டத்தின் குறிக்கோளையே சிதைக்கும் வகையில், அதன் பெருமைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் பிரதமரையும், முதல்அமைச்சரையும் எழுத்தில் பதிக்க முடியாத அருவருப்பான வார்த்தைகளால் வசைபாடியோரையும், அறப்போர்க் களத்துக்குள் ஊடுருவி வன்முறைக்கு தூபம் இட்டவர்களையும், அவர்களின் பின்னணியில் இருந்து ஏவிவிட்டவர்களையும் தக்க புலன் விசாரணையின் மூலம் கண்டறிந்து, சாட்சியங்களோடு நிலைநாட்டி, அவர்கள் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தடியடி

காவல்துறையின் பல வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. சில காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில் ஓரிரு இடங்களில் காவல்துறையினரே வாகனங்களுக்கு தீ வைக்கும் நிகழ்ச்சி வாட்ஸ்அப்பில் ஆதாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அந்தக் காவலர்கள் மீதும், தவறு செய்யாத மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் மீதும் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

வழக்குகள்

அதே நேரத்தில், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த முற்பட்டவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. அத்தனை வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com