விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1992-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதற்காக ஐகோர்ட்டில் பதவியில் இருக்கும் நீதிபதி ஒருவர் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அந்த தீர்ப்பாயம் நாடு முழுவதும் விசாரணை நடத்தி, தடையை உறுதி செய்யும்.

அதன்படி மத்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து வருகிறது. தற்போது ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை இந்த தடை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2012-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிர்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ நேரில் ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, தடை உத்தரவை உறுதி செய்வதற்கான தீர்ப்பாய விசாரணையில் தன்னை ஒரு வாதியாக சேர்க்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை, தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது. அப்படியிருக்கும்போது, இந்த வழக்கை வைகோ தாக்கல் செய்ய முடியாது. இந்த தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் அமைப்பு வழக்கு தொடவில்லை. அவர்களே இந்த தடையை ஏற்றுக் கொண்ட நிலையில், வேறு யாரும் தடையை எதிர்த்து வழக்கு தொடரமுடியாது.

விடுதலைப்புலிகள் அமைப்பால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அந்த அமைப்பு மீதான தடையை மத்திய அரசு, 2014, 2019 மற்றும் 2024 ம் ஆண்டுகளில் நீட்டித்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்த 3 ஆண்டுகள் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. அதனால், 2012-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை உத்தரவை எதிர்த்த வைகோ தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல'' என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து புலிகளின் ஆதரவாளர், அனுதாபி என்ற அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இந்தியாவுடன் தமிழீழத்தை இணைக்க முயற்சித்ததாக குற்றம் சாட்ட எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால், புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டவிரோதமானது. அதனால், தடையை நீக்க வேண்டும்'' என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''தற்போது 2024-ம் ஆண்டு அறிவிப்புதான் அமலில் உள்ளது. 2012-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவு காலாவதி விட்டது. எனவே, அந்த உத்தரவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு செல்லத்தக்கதல்ல. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ கூறுகையில், “நான் எப்போதும் விடுதலை புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன். விடுதலை புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கை இந்த நீதிமன்றம் இத்தனை ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்துள்ளது. இதில் நான் தோல்வி அடையவில்லை” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com