மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வலியுறுத்தினார்.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் வைகோ சந்திப்பு
Published on

சென்னை,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை 26ந் தேதி இரவு 9 மணியளவில் அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்றுடன் 13வது நாளாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கட்சி சார்பு அற்ற முறையில் தமிழக விவசாயிகள் நடத்தி வருகின்ற அறப்போராட்டத்தைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகின்றேன். தமிழகத்தில், 400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

கடுமையான வறட்சியினால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் மட்டும் 29 லட்சம் ஏக்கர் பாசனம் இழந்துவிட்டது. மொத்தத்தில் ஒரு கோடி ஏக்கர் விவசாயம் பாழாகிவிட்டது.

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வறட்சியைச் சமாளிக்க ரூ.39,565 கோடி தேவை என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.1,698 கோடியே 45 லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதுவும்கூட அடுத்த பயிரீட்டுக்கு தேவையான இடுபொருட்களை வாங்குவதற்கு என்று அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், வரலாறு காணாத அளவிற்குத் தமிழகத்தைத் தாக்கிய வார்தா புயலால் விளைந்த பெரும் சேதத்தை ஈடுகட்டுவதற்காகவும், மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் தமிழக அரசு கோரிய அளவிற்குப் போதுமான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக, தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும்.

வறட்சி நிவாரணப் பணிகளுக்குக் கூடுதல் நிதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். போராட்டம் நடத்தி வருகின்ற விவசாயிகளின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலனை செய்து, விவசாயிகளின் பட்டினிப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com