ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா
Published on

திருவட்டார், 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. இதையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெறுகிறது. அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூசைகள் நடத்தப்படுகிறது. காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், பின்னர் கருவறைக்கு அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துவரப்படுகிறது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை நடக்கிறது.

பக்தர்கள் அனுமதி

வழக்கமாக பகல் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். ஆனால் வைகுண்ட ஏகாதசியையாட்டி நாளை மதியம் 15 நிமிடங்கள் மட்டுமே கோவில் நடை சம்பிரதாயத்துக்காக அடைக்கப்படும். அதைத்தொடர்ந்து இரவு 10 மணி வரை பக்தர்கள் இடைவெளியின்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடைபெறுகிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கும். இரவு 9.30 மணி அளவில் கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. கோவிலில் காலை 10 மணியிலிருந்தே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மின்விளக்கு அலங்காரம்

சாமியை பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்ய வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நெருக்கியடித்து கோவிலுக்குச்செல்லவேண்டிய நிலை ஏற்படாது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி அளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. கோவில் வெளிப்பகுதியில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ் இயக்கம்

வைகுண்ட ஏகாதசியன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டபம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com