காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே அறிவழிந்துபோனார்: வக்கீலுக்கு வைரமுத்து கண்டனம்

நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
காலில் அணியவேண்டியதை கையில் அணிந்தபோதே அறிவழிந்துபோனார்: வக்கீலுக்கு வைரமுத்து கண்டனம்
Published on

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரத்தை வக்கீல்கள் குறிப்பிடுவதை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வக்கீல், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கினார். தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட காவலாளிகள், அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்றதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதியரசர் பி.ஆர்.கவாய் மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன். இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும். வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன். தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள். அந்தச் சாத்திரத்தின் ஆத்திரம்தான் இது

காலில் அணியவேண்டியதைக் கையில் அணிந்தபோதே அவர் அறிவழிந்துபோனார் என்று அறிய முடிகிறது அதை மென்மையாகக் கையாண்ட நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம். நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது. வீச முயன்ற பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம் அவர் பேசியபொருளை மறந்துவிட முடியாது. அது நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும். பழையன கழிய வேண்டாமா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com