முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து பாராட்டு

முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல் கையெழுத்திலேயே முழு நம்பிக்கை பெற்றுவிட்டார் மு.க.ஸ்டாலின் கவிஞர் வைரமுத்து பாராட்டு
Published on

சென்னை,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளிலேயே அவர் இட்டிருக்கும் முதல் கையொப்பத்திலேயே தமிழ்நாட்டின் முழு நம்பிக்கையை பெற்றிருக்கிறார் தமிழகத்தின் முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி கரைபுரள்கிறது.

பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணமென்பது தாய்க்குலத்துக்கு அவர் செய்திருக்கிற மரியாதை. கொரோனா உதவித்தொகை என்பது அவர் சொன்ன சொல்லை காப்பாற்றும் நேர்மை. குறை தீர்ப்பதற்குத் தனித்துறை நியமித்திருப்பது அவரது நிர்வாக நேர்த்தி. முதல்-அமைச்சர் ஆனவுடன் இதை அவர் செய்திருக்கிறார் என்று சொல்வதைவிட, முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே முதல்-அமைச்சராகத் தன் மூளையை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது; வாழ்த்துக்கள்.

நல்லாட்சி தருவார்

இன்றைக்கு முதல்-அமைச்சராக அவர் கிரீடம் கொண்டிருப்பதை மட்டும்தான் பலபேர் ரசிப்பார்கள்.

ஆனால், அந்த கிரீடத்தை அடைவதற்கு முன்னால் அவர் தாங்கியிருந்த முள்மகுடங்கள் எத்தனை என்பதை என்னைப் போன்றவர்கள் அறிவார்கள். அதனால் தான் அவருக்கு வாழ்வின் விலை தெரிகிறது; அரசின் நிலை தெரிகிறது; மக்களின் வலி தெரிகிறது. ஒவ்வொன்றுக்குமான மதிப்பையும், விழுமியத்தையும் அவர் அறிந்துவைத்திருக்கிறார் என்பதனால் அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com