எம்.எல்.ஏ பதவி ராஜினாமா: திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்


தினத்தந்தி 21 Jan 2026 9:14 AM IST (Updated: 21 Jan 2026 11:27 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வைத்திலிங்கம் வழங்கினார்.

சென்னை

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிக்கு தாவி வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர்.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பாக , தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார்.

1 More update

Next Story