வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் 26-ந்தேதி கரைக்கப்படுகிறது

தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி 26-ந்தேதி கரைக்கப்படுகிறது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னையில் கடலில் கரைக்கப்படுகிறது.
வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் 26-ந்தேதி கரைக்கப்படுகிறது
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்லியில் அனைத்து மாநில பா.ஜ.க. தலைவர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக்கொண்டு விமானம் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை வருகிறார்.

விமான நிலையத்தில் இருந்து வாஜ்பாயின் அஸ்தி ஊர்வலமாக பா.ஜ.க. அலுவலகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு நாளை (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து நாளை மாலை 6.30 மணிக்கு வாஜ்பாயின் அஸ்தி மூத்த தலைவர்கள் தலைமையில் சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்பத்தூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், ஆற்காடு, வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சீபுரம், தாம்பரம் வழியாக சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரிக்கும், முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் திருச்சிக்கும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரத்துக்கும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பவானிக்கும், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரைக்கும் வாஜ்பாய் அஸ்தி கொண்டுசெல்லப்படுகிறது.

26-ந்தேதி காலை 11 மணிக்கு வாஜ்பாய் அஸ்தி 6 இடங்களிலும் ஒரே நேரத்தில் கரைக்கப்படுகிறது. சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கரைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com