வால்பாறை: தேயிலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தைகள்

சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு தேயிலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தைகளை கண்டு ரசித்தனர்.
வால்பாறை: தேயிலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தைகள்
Published on

வால்பாறை

கோவை மாவட்டம் வால்பாறையில் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் இரவு, பகலாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தநிலையில் வால்பாறை - பொள்ளாச்சி சாலை காமராஜர் நகர் பகுதி அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் 2 சிறுத்தைகள் உலா வந்தன. இதனை அந்த வழியாக சாலையில் வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.

தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சாலையில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு தேயிலை தோட்டத்தில் உலா வந்த சிறுத்தைகளை கண்டு ரசித்தனர். இதையடுத்து சிறிதுநேரத்தில் அந்த வழியாக வந்த அனைத்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களும் சிறுத்தையை காண குவிந்தனர். அவர்கள் தங்களது செல்போனில் சிறுத்தையை புகைப்படம் எடுத்தனர். அப்போது ஒரு சிறுத்தை அங்கிருந்து ஓடிய நிலையில், மற்றொரு சிறுத்தை தேயிலை தோட்ட பகுதியில் இருந்த பாறை மீது ஏறி நடந்து சென்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com