

நீலகிரி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் தங்கராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.இதையொட்டி நாமக்கல்லில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய அவரது ஆதரவாளர்கள் குன்னூருக்கு வேனில் வந்தனர்.
வழியில் சென்னையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் ‘லிப்ட்’ கேட்டு அந்த வேனில் ஏறினர். அவர்களை ஏற்றிக் கொண்டு வேன் கரும்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் பயந்து அபாயக் குரல் எழுப்பினர். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் வேனில் இருந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வேனில் இருந்த டிரைவர், கிளீனர் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.