

வால்பாறை,
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியை சேர்ந்த 35 பேர் சுற்றுலா வேனில் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் வால்பாறையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சுற்றுலா வேன் இரவு புறப்பட்டது. அட்டகட்டி அருகே வந்த போது டிரைவர் மணிகண்டன், பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் மெதுவாக சென்று அவர் வேனை நிறுத்தினார். பின்னர் அவர். என்ஜின் சூடு குறைந்த உடன் வேனை எடுத்து வருகிறேன்.
நீங்கள் பஸ்சில் செல்லுங்கள் என்று கூறி உள்ளார். அதன்படி வேனில் இருந்த 30 பேர், பழனி செல்லும் அரசு பஸ்சில் ஏறிச் சென்றனர். இதையடுத்து டிரைவர் மணிகண்டனுடன் சுற்றுலா பயணிகள் 5 பேருடன் ஆழியார் நோக்கி வேனில் வந்து கொண்டு இருந்தனர். குரங்கு நீர்வீழ்ச்சி அருகே வந்த போது வேனில் பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று மலைப்பாதை சாலையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இதனால் வேனுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். இந்த விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் லேசான காயம் அடைந்தனர். விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வேனில் வந்த 13 குழந்தைகள் உள்பட 30 பேரும் ஏற்கனவே அரசு பஸ்சில் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.