

சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை பெரவள்ளூர் கோபாலபுரம், சென்னை நடுநிலைப் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவியை, மாதவிடாயைக் காரணம் காட்டி வகுப்பறைக்கு வெளியே நீண்ட நேரம் நிற்க வைத்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறிச் சாதித்து வரும் நிலையில், குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரால் மாணவிகள் இதுபோன்ற அவமானங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித உரிமைகளுக்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரான மனிதத்தன்மையற்ற செயல்.
அனைத்துப் பள்ளிகளிலும் பருவமெய்திய மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், அத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை முறையாகக் கண்காணித்து மாணவிகளின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.