

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில், மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் தூத்துக்குடி ரெயில் நிலைய மேம்பாடு மற்றும் புதிய ரெயில் சேவைகள் குறித்த கோரிக்கை மனு நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், "தூத்துக்குடி- கச்சிகுடா (செகந்திராபாத்) இடையே புதிய வாராந்திர ரெயிலை அறிமுகப்படுத்தியதற்காக மத்திய அரசுக்கும், அமைச்சருக்கும் சங்கத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கியத் தேவைகளாகக் கருதப்படும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
வந்தே பாரத் ரெயில்: தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே பயண நேரத்தைக் குறைக்கும் வகையில், 'வந்தே பாரத்' விரைவு ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் ரெயில்: தற்போது வாரம் இருமுறை இயக்கப்படும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரெயிலை பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும்.
ரெயில் நீட்டிப்பு: திருநெல்வேலி- கன்னியாகுமரி ரெயிலையும், மும்பை லோக்மான்யா திலக்- மதுரை ரெயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். அதேபோல் திருச்சி- விருதுநகர் ரெயிலையும் தூத்துக்குடி வரை நீட்டிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாலருவி எக்ஸ்பிரஸ்: தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயங்கும் பாலருவி விரைவு ரெயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டிகளை (A/C Coach) உடனடியாக இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன், இதுகுறித்து ரெயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் மா.பிரமநாயகம் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.