

சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்ணாரப்பேட்டை-விமான நிலையம், சென்னை சென்டிரல்-விமான நிலையம், சென்டிரல்-பரங்கிமலை ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை கவருவதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் பயணிகளை கவருவதற்காக சென்னை சென்டிரல்-விமான நிலையம், சென்டிரல்-பரங்கிமலை இடையே உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், இந்த வழித்தடத்தில் இயங்கும் ரெயில்களிலும் செல்லும் பயணிகள் தங்களது செல்போன் மூலம் இலவசமாக சினிமாக்களை பார்க்கும் வசதியும், வீடியோ கேம்களை விளையாடும் வசதியும் அறிமுகப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இதேபோல் கிண்டி, ஆலந்தூர், பரங்கிமலை, நந்தனம் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏற்கனவே அமலில் இருக்கும் மின்சார ஸ்கூட்டர் வசதியும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இந்த புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர்(இயக்கம்) நரசிம்ம பிரசாத் வரவேற்றார். விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-
சென்னையில் தற்போது 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தினமும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்கள் தாங்கள் சென்றடைய வேண்டிய பகுதிக்கு எளிதாக செல்வதற்கு வசதியாக வாகன போக்குவரத்து வசதியும் மெட்ரோ ரெயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் தற்போது மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விம்கோநகர்-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் திட்டப்பணி ரூ.3,770 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் ஜூலை மாதத்தில் நிறைவு பெறும். ஜூலை மாதம் முதல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும்.
மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 52 கி.மீ. தொலைவில் மெட்ரோ ரெயில் சேவை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கோயம்பேடு வழியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளும் விரைவில் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்பு அமைச்சர் எம்.சி.சம்பத் சென்னை சென்டிரலில் இருந்து எழும்பூர் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து சுகர்பாக்ஸ் செயலி மூலம் சினிமா போன்றவற்றை பார்க்கும் வசதியை பயணிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
விழாவில் மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், இயக்குனர் ராஜீவ்நாராயண் திவேதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.