வி.சி.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் போலீசில் புகார்

வி.சி.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வி.சி.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் போலீசில் புகார்
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் கழுவந்தோண்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். அதனை மர்மநபர்கள் சிலர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ம.க.வினர்தான் காரணம் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுவர் விளம்பரத்தை அளித்த பா.ம.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ரவிசங்கர் தலைமையில் அக்கட்சியினர் வந்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அதில், பா.ம.க. மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீண்பழி சுமத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க. நிர்வாகிகள் மீது பொய்யான விமர்சனங்களை எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குமார், முத்துகிருஷ்ணன், தங்கராசு, பூராசாமி ஆகியோர் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பா.ம.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். எனவே சமூக நீதியை நிலைநாட்ட உண்மை தன்மையை ஆராய்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. அப்போது பா.ம.க. நகர செயலாளர் பரசுராமன், மாநில துணைத் தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் படைநிலை செந்தில், நகர தலைவர் ரெங்கநாதன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் முன்பு திடீரென பா.ம.க.வினர் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com