நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து 28-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்- திருமாவளவன் அறிவிப்பு

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
திருமாவளவன்
திருமாவளவன்
Published on: 

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2027-ம் ஆண்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி முடித்த பின்னர், நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு எனப்படும் இந்த நடவடிக்கை நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கிடையே தற்போது நிலவும் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கக் கூடியதாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

குறிப்பாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கிய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை மீண்டும் கொண்டுவருவதற்கு பா.ஜனதா அரசு ஏற்கெனவே மசோதாக்களை எதிர்த்து வாக்களித்த கட்சிகளிடமும் ஆதரவு திரட்டுகிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்வதோடு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவையும் நிறைவேற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

அதிபர் ஆட்சிமுறை கொண்டுவரப்படும்

அந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை எண்ணிக்கை பலம் இல்லாமலேயே அது 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும். தற்போதுள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறை மாற்றப்பட்டு அதிபர் ஆட்சிமுறை கொண்டுவரப்படும். எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சதிமுயற்சியைக் கண்டித்தும், தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் வரும் 28-ந்தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X