

சென்னை,
திருப்பரங்குன்றம் வழக்கின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ- 23ம் தேதி) மாலை அமைதி பேரணி நடைபெறம் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள பிள்ளையார் கோவிலின் முன்பு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதை யாரும் எதிர்க்கவில்லை. இந்த ஆண்டும் வழக்கம்போல அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும்.
ஆனால், வம்பிழுப்பவர்கள் வழக்கு தொடுத்திருப்பது அருகிலுள்ள தர்காவுக்கு செல்லும் வழியில் நிற்கும் ஒரு கல்தூணில் ஏற்றுவோம் என்றுதான். இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தீர்ப்பு மதுரையில் நிலவும் நல்லிணக்கமான சூழலை பாதிக்கும் வகையிலான பதற்றத்தை உருவாக்கி உள்ளது. ஏனெனில், விசாரணையை தொடங்காமலேயே, ஆதாரங்களை ஆய்வு செய்யாமலேயே நிபந்தனையுடன் இப்போதைக்கு அந்த தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதே ஆகும்.
வழக்கமாக, ஆய்வுக்கு முன்னர் இடைக்காலத் தீர்ப்பு, 'ஸ்டேட்டஸ் க்வா' (Status qua) -இருக்கும் நிலையே தொடரட்டும்-என்றே வழங்குவர். ஆனால், இந்த தீர்ப்பு அவ்வாறின்றி இறுதி தீரப்பு இப்படி தான் இருக்கும் என சொல்லாமல் சொல்லும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், இதனை எதிர்த்து சீராய்வு மனுவை (ரிவீயூ) தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அரசின் நேர்மையான இந்த நிலைபாட்டினை வி.சி.க. வரவேற்கிறது.
அத்துடன் , இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மதுரையில் நாளை (நவ-23) மாலை நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் வி.சி.க. சார்பில் நான் பங்கேற்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.