

சென்னை,
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டபேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையை வழங்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, எதிர்க்கட்சியான திமுக, ” இந்த கார் சலுகை தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் தேவையில்லை” என அதிகாரப்பூர்வமாக மறுத்தது. அதே போல், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கும் கார் தேவையில்லை எனவும், அதற்கு பதிலாக தங்கள் ஊரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்குவதை வி.சி.க. வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் முடிவை வி.சி.க. வரவேற்கிறது. விருப்பமில்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது” என்று தெரிவித்தார்.