

சென்னை,
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
"புதிதாக அமைந்துள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணிக்கு இடதுசாரிகள் ஆதரவு உண்டு. தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என முடிவுசெய்யும் அதிகாரம் தவெகவுக்கு உண்டு. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. யாரை ஆதரிப்பது, வெற்றிபெற வைப்பது என அந்தந்த தொகுதி மக்கள் முடிவுசெய்வார்கள்.
புதிய தலைமைச்செயலகம் அமையவுள்ள இடத்தில் வசிக்கும் மக்களின் கருத்து என்ன என்பது தெரியவில்லை. அந்த வட்டார மக்களின் கருத்தையும் அறிந்து தமிழக அரசு ஒரு முடிவுக்கு வரும் என நம்புகிறேன்.
மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின். அவர் கைதுசெய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை யாரும் மறுக்க இயலாது. முதல்-அமைச்சரின் பேச்சுக்கு எனது கருத்தை எனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளே. ’இதுபற்றி தான் பேசிய கருத்து உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டது அல்ல, இதனால் யார் மனதும் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் செல்லி இருக்கிறார்.’
தவெக தலைமையிலான கூட்டணி அறம் சார்ந்து இயங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் விழுமியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கைகோர்த்து இருக்கிறோம். அதில் நாங்கள் கவனமுடம் இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு மட்டும் அளிக்காமல், அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்டுதல் தருவோம் வழங்குவோம். ”
இவ்வாறு அவர் பேசினார்.