கேரள முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் நாளை பதவியேற்கிறார்

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்த ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறைகள் ஒதுக்கப்பட்டு சமாதானப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கேரள முதல்-மந்திரியாக வி.டி.சதீசன் நாளை பதவியேற்கிறார்
Published on

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு வி.டி. சதீசன் கேரளத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. அவர் நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார்.வி.டி. சதீசனுடன் 21 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேரும், கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 5 பேரும் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவையில் மீதமுள்ள இடங்களை இறுதி செய்வதற்காக இந்திரா பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வி.டி. சதீசன், சன்னி ஜோசப் மற்றும் தீபாதாஸ் முன்ஷி ஆகியோர் பங்கேற்றனர்.அமைச்சர் பதவிக்காக ஷனிமோல் உஸ்மான் மற்றும் பிந்து கிருஷ்ணா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், ஷனிமோல் உஸ்மானுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருந்த ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை மற்றும் ஊழல் தடுப்பு துறைகள் ஒதுக்கப்பட்டு சமாதானப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, கூட்டணி கட்சிகளுக்கிடையே பதவிக்கால நிபந்தனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஏ.பி. அனில்குமார் கூறுகையில், “கேரள மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும். தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கும்” என்றார்.மேலும், அமைச்சர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் கவர்னரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.முதலமைச்சராக பொறுப்பேற்கும் வி.டி. சதீசனுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை மற்றும் ஊழல் தடுப்பு, கே. முரளிதரனுக்கு சுகாதாரம், சன்னி ஜோசப்புக்கு வருவாய், ஏ.பி. அனில்குமாருக்கு சுற்றுலாத்துறை மற்றும் எம். லிஜுவுக்கு கலால் துறை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சாண்டி உம்மனுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com