

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ஏ.இசக்கிலட்சுமி ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி காணாமல் போன அன்றே (மார்ச் 10) காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தால் மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். 14 மணிநேரம் கழித்தே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டாரா இல்லையா என்பதில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே முரணான தகவல்கள் நிலவுகின்றன. இது வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாததாலும், உள்ளூர் காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாததாலும், இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். தற்போது 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தாலும், நான்கு நாட்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், காவல்துறையின் பாராமுகத்தைக் கண்டித்தும் தூத்துக்குடி- மதுரை நெடுஞ்சாலையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது போன்ற குற்றச் செயல்கள் தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும், மாணவியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.