

திருப்பூர்,
தொடர் விடுமுறை மற்றும் வரத்து அதிகரிப்பு காரணமாக திருப்பூரில் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது.
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக கேரட் உள்ளிட்ட காய்கறிகள் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வருகின்றன.
நடப்பாண்டில் ஆயுதபூஜை மற்றும் தசரா பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இதன் காரணமாக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க போதிய மக்கள் நடமாட்டம் இன்றி நேற்று விற்பனை மந்தமாக காணப்பட்டது. ஒருபுறம் மக்கள் வரத்து குறைந்த நிலையிலும், மறுபுறம் மார்க்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து வழக்கத்தை விட அதிகரித்தது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலை குறைந்தது.
மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக 15 கிலோ கொண்ட ஒரு கட்டு சுரைக்காய் ரூ.250-க்கு விற்ற நிலை மாறி, நேற்று ரூ.200-க்கு விற்பனையானது. இதேபோல் பீர்க்கங்காய் கட்டு ரூ.600-லிருந்து ரூ.500 ஆகவும், புடலங்காய் கட்டு ரூ.500-லிருந்து ரூ.400 ஆகவும் குறைந்தது.கத்தரிக்காய், அவரை 20 கிலோ கொண்ட கத்தரிக்காய் மூட்டை ரூ.600-லிருந்து ரூ.400 ஆகவும், அவரைக்காய் மூட்டை ரூ.1,000-லிருந்து ரூ.800 ஆகவும் குறைந்து சரிவை சந்தித்தது.
இதுதவிர மிளகாய் மூட்டை ரூ.600, வெண்டைக்காய் ரூ.600, பீட்ரூட் ரூ.800, முள்ளங்கி ரூ.400, காலிபிளவர் (20 பூக்கள் கொண்ட கட்டு) ரூ.600, 5 கிலோ ஆசாணிக்காய் ரூ.900, பூசணிக்காய் ரூ.800 என விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஓரிரு நாட்கள் வரை இந்த விலை வீழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.