கந்து வட்டி கேட்டு மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற காய்கறி வியாபாரி...!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காய்கறி வியாபாரி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்து வட்டி கேட்டு மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற காய்கறி வியாபாரி...!
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 35). காய்கறி வியாபாரி. இவரது மனைவி திரிஷா (25), மாமியார் மாரியம்மாள் (40). இவர்கள் 3 பேரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து நாகராஜன் கூறியதாவது:

எனது மனைவி, மாமியார் ஆகியோருடன் தலைவாசல் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறேன். வியாபார தேவைக்காக வரகூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கினேன். அதில், ரூ.16 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டேன். மீதி ரூ.4 ஆயிரம் மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் அந்த பணத்தை திருப்பி செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர், கந்து வட்டி கேட்டு வீடு புகுந்து எங்களை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்தார். கர்ப்பிணியான எனது மனைவியின் வயிற்றில் எட்டி தாக்கியதால் அவர் காயம் அடைந்தார்.

இது தொடர்பாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது வெளியில் வந்துள்ளோம். எனவே, அதிக வட்டி கேட்டு கொடுமைப்படுத்தும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com