கொடைக்கானலில் வாகன நுழைவு கட்டணம் உயர்வு

கோப்புப்படம்
கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறையால் ஏராளமானோா் படையெடுக்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் (ஜனவரி 1) முதல் கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.250-லிருந்து ரூ.300 ஆகவும், சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே போல வேன்களுக்கான கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும், கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.60-லிருந்து ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது.






