கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்; வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து

மோட்டார் சைக்கிள், கார், ஆம்னி பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம்; வாகனத்தொழில் சார்ந்தோர் கருத்து
Published on

தமிழ்நாட்டில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. அதற்கான சட்ட மசோதா சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரி உயர்வதுடன், விலையும் உயர்கிறது.

முன்பு மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக (லைப் டேக்ஸ்) 8 சதவீதம் பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அதாவது ரூ.1 லட்சம் வரை விற்கப்படும் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு இனி 10 சதவீதம் வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் மோட்டார் சைக்கிளுக்கு 12 சதவீதம் வரியும் வசூலிக்கப்படும்.

அதுபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டு அடுக்கு முறையில், அதாவது ரூ.10 லட்சம் வரையிலான ஒரு காருக்கு 10 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 15 சதவீதம் வரியும் பெறப்பட்டு வந்தது.

அது தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள கார்களுக்கு 12 சதவீதம் வரியும், ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரியும், ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள கார்களுக்கு 20 சதவீதம் வரியும் இனி வசூலிக்கப்படும்.

இதுதவிர பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஆம்னி பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கும் வரிவிகிதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த வரி உயர்வு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வாகனத்துறையைச் சேர்ந்த சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

வாடகை கட்டணம் உயர்வு

மகேந்திரன் (அனைத்து வாடகை மோட்டார் வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தொழிற்சங்க மாவட்ட செயலாளர், திண்டுக்கல்):- வாடகை வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் பற்றாக்குறை, வாகனங்களின் டயர் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் வாடகை வாகன உரிமையாளர்கள் கலங்கி நிற்கும் இந்த நேரத்தில் வாகனங்களுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடகை கட்டணத்தை உயர்த்தி ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோம். கட்டணம் உயர்ந்தால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் போக்குவரத்து தொழில் நலிவடைந்துவிடும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

சரவணன் (லாரி உரிமையாளர், பழனி):- ஆற்றில் மணல் இல்லாததால் கட்டுமான தொழில் பாதிப்படைந்து வருகிறது. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் லாரி உரிமையாளர்களுக்கு இருக்கிறது. இருந்த போதிலும் வேறு தொழில் தெரியாததால் லாரி ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறோம். அதோடு வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் பெற்று தான் லாரிகளை வாங்குகிறோம். தற்போது கிடைக்கும் வருமானம் லாரிகளுக்கான தவணை தொகையை கட்டுவதற்கு தான் பயன்படுகிறது. கூடுதலாக வருமானம் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் அனைத்து வாகனங்களின் வரியை உயர்த்துவதால் இந்த தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.

மறுபரிசீலனை செய்ய வேண்டும்

முத்துக்கிருஷ்ணன் (ஆட்டோ டிரைவர், ஒட்டன்சத்திரம்):- 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். வாடகை வாகனங்களுக்கான பசுமை வரி, சாலை வரி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டு தோறும் வாகனத்தின் தகுதி சான்றிதழ் பெற ஆகும் செலவு என பல்வேறு செலவுகள் இருக்கிறது. வாடகை வாகனத்தில் பயணம் செய்பவர்களிடம் பெறும் தொகையை கொண்டு இந்த செலவுகளை எல்லாம் சமாளிப்பதுடன் குடும்ப செலவுகளையும் கவனிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அரசு புதிதாக வரியை கொண்டு வந்தால் எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பாலமுருகன் (சரக்கு வாகன உரிமையாளர், செந்துறை):- சரக்கு வாகனங்களை இயக்கும் தொழிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வருகிறேன். சரக்கு வாகனங்களுக்கான பல்வேறு வரிகள், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறோம். இந்த நேரத்தில் வரியை உயர்த்தினால் எங்களை போன்ற நடுத்தர வர்க்கத்தினர் இந்த தொழிலை தொடர முடியாமல் கைவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com