

பயங்கரவாதிகளின் எதிரான நடவடிக்கையின் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், சென்னையில் உள்ள வேளச்சேரி சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல் அமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்தவரும், மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசின் அமைதிக்கால உயரிய விருதான அசோக் சக்ரா விருது பெற்றவருமான மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனப் பெயர் சூட்டிட வேண்டும் என முதல்வர் விஜய்யை, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி.ஶ்ரீஹரி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர், இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, இந்தியத் திருநாட்டிற்காகப் போராடி உயிர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனவும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து பின்னர் ராணுவத்தில் பணிபுரிந்து திறம்படப் பணியாற்றி, பணியின்போது வீர மரணம் அடைந்ததால் இவர் “தாம்பரம் மண்ணின் மைந்தர்” எனப் போற்றப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.