வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
Published on

நாகை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. இங்கு வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து, மாதாவை தரிசித்து செல்கின்றனர்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். இந்த திருவிழாவானது 10 நாட்கள் செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும். முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர் பவனி செப்டம்பர் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தனியார் விடுதிகளிலும், பேராலயத்திற்கு சொந்தமான விடுதிகளிலும் முன்னதாக வந்து அறை எடுத்து தங்கி வருகின்றனர். மேலும் கொடியேற்றத் தினத்தன்று திரளான பக்தர்களின் வருகை அதிகரிக்கும்.

அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பேராலயம் சார்பிலும் போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான சாலை வசதி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். குழந்தை இயேசு, மாதா செரூபங்களை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்துக் கொண்டு ஊர்வலமாக வருகின்றனர்.

பேராலய திருவிழா கொடியேற்றத்தையொட்டி 28 மற்றும் 30-ம் தேதிகளில் தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com