வேலூர்: ஏரியில் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!

ஏரியில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: ஏரியில் குளிக்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!
Published on

வேலூர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ராஜிக்கல் பகுதியைச் சேர்ந்த மேகநாதனின் மகன் கிரிதரன் (15), அழிஞ்சிகுப்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால், கிரிதரன் தனது நண்பர்களுடன் பன்னீர்குட்டை பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் சேற்றில் சிக்கிய அவர் நீரில் மூழ்கினார்.

மாணவர் உயிரிழப்பு

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் சுமார் அரை மணி நேரம் போராடி மாணவரை மீட்டபோது, அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மேல்பட்டி போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்ற மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com