வேலூர்: ரூ.20 லட்சம் மதிப்பிலான தொழிற்சாலை பேட்டரிகள் ஏற்றிச்சென்ற லாரியில் தீ விபத்து

தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதுமாக காலியாகி விட்டதால், குடியாத்தத்தில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
 லாரியில் தீ விபத்து
Published on

அணைக்கட்டு,

சென்னை போரூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனே நகருக்கு சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான ராட்சத தொழிற்சாலை பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று அதிகாலை சென்றது. லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம். ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 30) என்பவர் ஓட்டிச்சென்றார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நேற்று காலை 11 மணி அளவில் லாரி சென்றபோது, அதன் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை வெளியேறியது. இதை கவனித்த டிரைவர் தமிழரசன் உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாக பரவி லாரியின் பின்பகுதி முழுவதும் எரியத்தொடங்கியது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதுமாக காலியாகி விட்டதால், குடியாத்தத்தில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

விசாரணை

இந்த தீ விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. தீ அணைக்கப்பட்ட பின்னர், பள்ளிகொண்டா போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. மேலும் பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com