இட்லி தட்டில் சிக்கிய சிறுமியின் விரல்... 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்

தீயணைப்பு வீரர்கள் இட்லி தட்டை லாவகமாக வெட்டி அகற்றி பத்திரமாக சிறுமியின் விரலை வெளியே எடுத்தனர்.
இட்லி தட்டில் சிக்கிய சிறுமியின் விரல்... 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாவகமாக அகற்றிய தீயணைப்பு வீரர்கள்
Published on: 

வேலூர்,

வேலூரில் 7 வயது சிறுமியின் விரல் இட்லி தட்டில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இட்லி தட்டில் சிக்கியது

வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் மெர்சி (7 வயது) . 2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த மெர்சி திடீரென இட்லி வேக வைக்கும் தட்டில் வலது கையின் சுண்டு விரலை விட்டுள்ளார். எதிர்பாராத விதமாக விரல் இட்லி தட்டில் சிக்கி கொண்டது.

பெற்றோர், மருத்துவர்கள் முயற்சி

மெர்சி மற்றும் அவரின் பெற்றோர் வெகுநேரம் முயன்றும் விரலை வெளியே முடியவில்லை. இதையடுத்து பெற்றோர் உடனடியாக மகளை வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறிதுநேரம் மெர்சியின் விரலை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

தீயணைப்பு வீரர்கள்

இதுகுறித்து மருத்துவர்கள், வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய சிறப்பு அலுவலர் கார்ல் மார்க்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தங்களிடம் இருந்த கருவிகளை கொண்டு இட்லி தட்டை லாவகமாக வெட்டி அகற்றி பத்திரமாக சிறுமியின் விரலை வெளியே எடுத்தனர்.

இட்லி தட்டில் இருந்து எடுப்பதற்காக சுமார் 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் சிறுமியின் விரலில் வீக்கம் மற்றும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. அதற்கு மருத்துவர்கள் மருந்து அளித்து சிறிதுநேரம் ஆசுவாசப்படுத்தினர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X