

சென்னை,
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி. சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
வேலூர் நாடளுமன்ற மக்களவை தொகுதிக்கான பொது தேர்தல் 5.8.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வரும் 27, 28 மற்றும் ஆகஸ்ட் 2-ம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு வானியம்பாடி பகுதியிலும், மாலை 6 மணிக்கு ஆம்பூர் பகுதியிலும், 28-ம் தேதி மாலை 5 மணிக்கு கீழ் வைத்தியான்குப்பம் பகுதியிலும், மாலை 6 மணிக்கு குடியாத்தம் பகுதியிலும் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
ஆகஸ்ட் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலுர் பகுதியிலும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.