வேலூர்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திடீர் தர்ணா

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேலூர்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் திடீர் தர்ணா
Published on

வேலூர்,

மத்திய அரசு 'அக்னிபாத்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய இந்திய பாதுகாப்பு பிரிவிற்கு 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அக்னிபத் திட்டத்தில் அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்படும் நபர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும்.

பின்னர் அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே திறமைமிக்க பணிக்கு ஏற்ப சிப்பாயாக நிரந்தர பணிக்கு எடுத்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி இன்று காலை முதல் வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

தகவலறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஊர்வலமோ செல்ல கூடாது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். உங்களின் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து ஆட்டோ, பஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு குவிந்தனர்.

பின்னர் அவர்கள் அங்குள்ள அணுகுசாலையில் அமர்ந்து மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்து விட்டு கலைந்து செல்லுங்கள். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டால் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களில் 5 பேர் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவனிடம் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com