மின் கட்டண உயர்வு முடிவை கைவிடாவிட்டால் போராட்டம் - வேல்முருகன் எச்சரிக்கை

2022-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வேல்முருகன் தெரிவித்தார்.
வேல்முருகன்
Published on

சென்னை,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மின் கட்டணம் உயர்வு

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, தற்போதைய கட்டணத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மின்வாரியத்தின் நிதி நிலைமையை மேம்படுத்த மின்வாரிய நிர்வாகத்தைச் சீரமைத்து, இழப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிடாவிட்டால், மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்தத் திட்டத்தின்படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே உதய் திட்டத்தின்கீழ் கடனுதவி கிடைக்கும் என்பதால், 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

52 சதவீதம் வரை உயர்வு

அதன்படி, 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அந்த அளவுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் திமுக அரசு வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வை அரசே ஏற்கும் என்று அறிவித்தது.

2022-ம் ஆண்டு திமுக ஆட்சியில் 52 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் அதிகபட்சமாக 6 சதவீதம் அல்லது முந்தைய நிதியாண்டின் பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ அதன்படி உயர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மூடல்

தற்போது இந்த ஆண்டு 3.86 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், “முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை மட்டும் உயர்த்த அரசு முடிவு செய்தாலும், அது மக்களை கடுமையாகப் பாதிக்கும். ஏற்கெனவே திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டால் மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் மூட நேரிடும். இதனால் வேலை இழப்பு அதிகரித்து, வேலையில்லா திண்டாட்டம் மேலும் மோசமாகும்.

தவெக வாக்குறுதி

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் “மாதம் ஒரு முறை மின்சாரம் கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும்” என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், முந்தைய ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை காரணம் காட்டி மீண்டும் கட்டணத்தை உயர்த்த முடிவெடுப்பது நியாயமற்றது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கும்.

எச்சரிக்கை

மக்கள் நலன் முதன்மை — மின் கட்டண உயர்வு முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களுடன் இணைந்து தீவிர போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com