ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான வேள்பாரி புத்தகம் - சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரை எம்.பி.யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இதை முன்னிட்டு சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது எனப் பலரும் குறைபட்டுக் கொள்ளும் காலத்தில், ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகிச் சாதனை படைத்திருக்கிறது 'வீரயுக நாயகன் வேள்பாரி'!
தொடராக வெளிவந்தபோதே படித்தவர்களையும் - இணையப் பக்கத்தில் படித்தவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்காகும்! அத்தனை பேருள்ளும் சகோதரர் சு. வெங்கடேசன் அவர்களின் எழுத்து ஏற்படுத்திய தாக்கத்தால்தான், பலரும் தங்களது குழந்தைகளுக்கு வேள்பாரி மாந்தர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளனர்!
தமிழுணர்வையும் - தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும். பல இளம் எழுத்தாளர்கள் உருவாகி அத்தகைய படைப்புகளைக் கொடுத்திட வேண்டும்!
தன் சாதனையைத் தானே விஞ்சும் அளவில் சகோதரர் சு.வெங்கடேசன் தனது அடுத்த படைப்புகளை எழுதிட இப்போதே வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






